நான் வெற்றி பெற்றால்...தூத்துக்குடியில் ஒரே மேடையில் 6 வேட்பாளர்கள்!
By தூத்துக்குடி, | Published On : 13th April 2014 01:00 AM | Last Updated : 13th April 2014 01:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே மேடையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இருவர் கலந்துகொண்டு தங்களது வாக்குறுதிகள் குறித்து பேசினர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, "சுதந்திரமான, நேர்மையான இந்திய தேர்தல் பாதுகாப்பு அமைப்பு' சார்பில் அனைத்து வேட்பாளர்களும் ஒரே மேடையில் பங்கேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, மதிமுக வேட்பாளர்கள் பங்கேற்காத நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பி.சி.வீ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ. மோகன்ராஜ், ஆம் ஆத்மி வேட்பாளர் ம. புஷ்பராயன், பகுஜன் சமாஜ் வேட்பாளர் அய்யாத்துரை, சுயேச்சை வேட்பாளர்கள் சாமுவேல், சாந்தாதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பி.சி.வீ. சண்முகம்: தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேறப் பாடுபட்டுள்ளேன். நான் வெற்றி பெற்றால் பாரம்பரியமான உப்பு மற்றும் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கவும், தீப்பெட்டித் தொழில் போன்ற சிறுதொழில்களைப் பாதுகாக்கவும் போராடுவேன். மேலும், மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் என்னை மக்கள் எந்த நேரத்திலும் சந்திக்கும் வகையில் நடந்து கொள்வேன்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ. மோகன்ராஜ்: மக்கள் போராட்டத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளேன். எங்களது கட்சியின் நோக்கமும் அதுதான். மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் தாமிரவருணி ஆற்றுப் பாசன விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும், மானாவாரி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் மக்களவையில் குரல் கொடுப்பேன். என்னைத் தேடி மக்கள் என்று இல்லாமல், மக்களைத் தேடியே நான் வருவேன் என்றார்.
ஆம் ஆத்மி வேட்பாளர் ம. புஷ்பராயன்: இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டக்களங்களிலேயே வாழ்க்கையைக் கழித்துள்ளேன். சுற்றுச்சூழலைப் பாதுகாக்காமல் தொழில் வளர்ச்சி என்பது தேவையற்றது. நான் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் பல்துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை அமைத்து, அந்தக் குழுவினர் அளிக்கும் திட்டத்தின்படி தொழில்வளர்ச்சியை மேற்கொள்ள முயற்சி செய்வேன். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கவும், சட்டத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதிலும் முழு முயற்சியில் மேற்கொள்வேன் என்றார்.
பகுஜன் சமாஜ் வேட்பாளர் அய்யாத்துரை: நான் வெற்றி பெற்றால் மாவட்டம் முழுவதும் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெருக்க நடவடிóக்கை எடுப்பேன். தாமிரவருணி ஆறு பாய்ந்தபோதிலும் தூத்துக்குடி மாவட்டம் பெரும்பாலும் வறட்சி மாவட்டமாகவே நிலவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
சுயேச்சை வேட்பாளர் சாந்தாதேவி: தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளரான நான் வெற்றி பெற்றால், பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர பாடுபடுவேன்.
மேலும், பனைத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கள் இறக்க அனுமதி பெற்றுத் தருவேன். நதிகளை இணைக்கவும், முஸ்லிம்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுப்பேன்.
சுயேச்சை வேட்பாளர் சாமுவேல்: மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்னை மக்களை பாதித்து வருகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், லஞ்சம் லாவண்யம் இல்லாத நிர்வாகம் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். சேது கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற குரல் கொடுப்பேன். தொழிற்சாலைகளின் கழிவுகள் இல்லாத தாமிரவருணி ஆற்றை உருவாக்கவும் முழு முயற்சி மேற்கொள்வேன்.