தூத்துக்குடியில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், மக்கள் பங்களிப்புடன் தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டுபிடிக்கும் பணியில் கண்காணிப்பு கேமரா முக்கியப் பங்காற்றி வருகிறது. இதேபோல, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், இருசக்கர வாகனங்கள் திருட்டைத் தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்களின் உதவி முக்கியமானதாகும்.
தூத்துக்குடி மாநகரில் காவல் துறை சார்பில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்களும் வியாபாரிகளும் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் அமைத்தால் குற்றங்களை ஓரளவு தடுக்க முடியும் என காவல் துறை சார்பில் அண்மையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 11ஆவது வார்டு பகுதியான முத்துக்கிருஷ்ணாபுரம், கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கேமராக்களின் செயல்பாடுகளை தொடங்கிவைத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேமராக்களின் செயல்பாடுகளை மாநகர காவல் உதவிக் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அண்மையில் பார்வையிட்டார். இதேபோல, வியாபாரிகள் பலரும் குழுக்களாக இணைந்து தங்களது வணிக நிறுவனங்களைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பணிகளை முன்னின்று நடத்திய மாநகராட்சி 11ஆவது வார்டு உறுப்பினர் பத்மாவதி கூறியது: எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேன் ஒன்றை சிலர் திருடிச் சென்றுவிட்டனர். எங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லாததால் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, போலீஸார் தருவைகுளம் சாலையில் உள்ள தனியார் ஒருவர் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு எங்களது பகுதியைச் சேர்ந்த ஊர்த் தலைவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் தாங்களாக முன்வந்து நிதியுதவி செய்து கண்காணிப்பு கேமராக்களை அமைக்க முடிவு செய்தோம். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டத்தின் 54ஆவது அணி திட்ட அலுவலர் ஆ. தேவராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர்.
தற்போது முதல்கட்டமாக 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளோம். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இரண்டு இடங்களில் இருந்து கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து, 11ஆவது வார்டுக்குள்பட்ட பகுதிகள் முழுவதிலும் தெருக்களின் முக்கிய சந்திப்புகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்களை அமைக்க உள்ளோம் என்றார்.
பொதுமக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்த விவரங்கள் மாநகரப் பகுதிகள் முழுவதிலும் தெரிவிக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.