புதுப்பிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையம் திறப்பது எப்போது?

கோவில்பட்டியில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ள அண்ணா பேருந்து நிலையம், எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவில்பட்டியில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ள அண்ணா பேருந்து நிலையம், எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதி ரூ.147 லட்சம், மேற்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி ரூ.353 லட்சம் என ரூ.5 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி கடந்த 2015 ஜூன் மாதம் தொடங்கியது.
இதையடுத்து, ராமசாமி தாஸ் பூங்கா பின்புறம் உள்ள காலியிடம் தாற்காலிக நகரப் பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து, புறவழிச் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் புறநகர் பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது.
இதனால் தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம், பசுவந்தனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் மக்கள், பிரதான சாலையில் இளையரசனேந்தல் சாலை விலக்கில், நிழற்குடை இல்லாதபோதும் கடும் வெயில், மழை நேரத்தில் வெகு நேரம் காத்திருந்து பயணம் மேற்கொள்ளவேண்டிய சூழலுக்கு உள்ளாகிவருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அண்ணா பேருந்து நிலைய முன்பகுதி சிற்றுந்துகள் நிறுத்தவே பயன்படுகிறது.
இந்நிலையில், அண்ணா பேருந்து நிலையத்தில் கிழக்குப் பகுதி புதுப்பிக்கப்பட்ட பணி முடிவடைந்துவிட்டது.
இப்பகுதியில், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணி மட்டுமே உள்ளது. மேலும், மேற்கு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பணி உள்பட சுமார் 15 சதவீத பணிகள் மட்டுமே உள்ளன.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மழைக்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே முடிந்த நிலையில் உள்ள பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் இளையரசனேந்தல் சாலை சந்திப்பில் செல்லும் பேருந்துகள் இலக்குமி ஆலை மேம்பாலம் வழியாக அண்ணா பேருந்து நிலையத்தின் நடுப்பகுதி வழியாக வந்து, கிழக்குப் பகுதி வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.
மேலும், பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதி முகப்பில் காலியாக உள்ள இடத்தில் சிற்றுந்துகளை ஏற்றி இறக்கிச் செல்ல அறிவுறுத்த வேண்டும்.
அனைத்து பேருந்துகளும் அண்ணா பேருந்து நிலையம் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
அண்ணா பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு திறந்துவிட்டால் போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வியாபாரத்தையும் வளர்ச்சி பெறச் செய்யலாம்.
பேருந்து நிலையப் பணி முழுவதையும் விரைந்து முடித்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சர்தார் கூறியதாவது:
அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது. கிழக்குப் பகுதியில் இருக்கும் சில பணிகளை விரைந்து முடித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து பேசி, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com