பிப். 20 முதல் தூத்துக்குடி- சென்னை இடையே கூடுதலாக ஒரு விமானம் இயக்கம்

தூத்துக்குடி- சென்னை இடையே தற்போது இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
2 min read

தூத்துக்குடி- சென்னை இடையே தற்போது இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகச் சலுகையாக ரூ. 1500இல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 1992ஆம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இருப்பினும், சில ஆண்டுகள் சரக்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை- தூத்துக்குடி இடையே சிறிய ரக பயணிகள் விமானப் போக்குவரத்தை "ஏர்டெக்கான்' நிறுவனம் தொடங்கியது. போதிய வருமானம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தச் சேவை சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. பின்னர் "கிங்பிஷர்' நிறுவனமும் சில ஆண்டுகள் விமான சேவையை இயக்கிவிட்டு நிறுத்தியது. தற்போது, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தூத்துக்குடி- சென்னை இடையே தினமும் இரண்டு வேளைகளில் விமானத்தை இயக்கி வருகிறது.
தினமும் காலை 11 மணிக்கும், மாலை 3.10 மணிக்கும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, சென்னையில் இருந்து தினமும் காலை 10.40 மணிக்கும், மாலை 2.40 மணிக்கும் தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் 270 பேர் சராசரியாக தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விமான நிலையத்தில் இரவை பகலாக்கும் அளவிலான வெளிச்சம் கொண்ட உயர் கோபுர மின்விளக்குகள் (ஹாலோஜன்) 1350 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட விமான ஓடுதளத்தில் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
விரைவில் இரவுநேர விமானப் போக்குவரத்தும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் தூத்துக்குடி- சென்னை இடையே "ஏர்கார்னிவல்' என்ற நிறுவனம் விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. 70 பயணிகள் அமரும் வசதி கொண்ட இந்த விமானப் போக்குவரத்துக்கான அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டது.
தினமும் சென்னையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 3.50 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், தூத்துக்குடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.50 மணிக்கு சென்னையை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஆர் 72.50 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் அறிமுக சலுகைக் கட்டணமாக தூத்துக்குடி- சென்னை இடையே பயணிக்க ரூ. 1500 மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் தாஜூ கூறியது: புதிய விமான சேவையை "ஏர்கார்னிவல்' நிறுவனம் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த விமானம் தூத்துக்குடி- சென்னை இடையே தினமும் ஒரு முறை இயக்கப்படுகிறது என்றார் அவர்.
இந்த புதிய விமான சேவை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என வர்த்தகர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com