தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் கண்டறிந்து இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்றும் இவ்வாறு முறைப்படுத்தினால் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 60 வார்டுகளில் புதிதாக இணைக்கப்பட்ட 9 வார்டுகள் பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 51 வார்டு பகுதிகளில் 1 ஆவது, 2 ஆவது மற்றும் 3 ஆவது பைப் லைன்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநகர் முழுவதும் ஏறத்தாழ 60 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ள நிலையில், நாளொன்றுக்கு ஏறத்தாழ 27 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இருப்பினும், வறட்சி காரணமாக தாமிரவருணி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது வாரத்துக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும், சில இடங்களில் 10 நாள்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரூ. 282 கோடியில் நிறைவேற்றப்பட்ட 4 ஆவது பைப் லைன் திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது சில இடங்களில் சோதனை அடிப்படையில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 60 வார்டுகளிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தமுள்ள 21 தொட்டிகளில் தற்போது 18 தொட்டிகளின் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதால் 4 ஆவது பைப் லைன் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து மற்ற குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் விநியோகிக்கப்படுகிறது.
இதனால், தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான குழாயில் இருந்து முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் விநியோகிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் ஏறத்தாழ 2 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், அதிகாரிகள் முழுமையாக ஆய்வு மேற்கொண்டால் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 50 வார்டுகளில் அதிகளவு முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூணன் கூறியது:
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும். முறைகேடு புகார் இருந்தால் குடிநீர் இணைப்புகளை வரைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியது: முறைகேடு குடிநீர் இணைப்புகள் தொடர்பாக இதுவரை புகார் ஏதும் வரவில்லை. அவ்வாறு புகார் வந்தால் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.