இடமாற்ற கட்டாயத்தில் தூத்துக்குடி ரயில் நிலையம் மீளவிட்டான் பகுதிக்கு மாற்ற அதிகரிக்கும் ஆதரவு

போதிய வசதி இல்லாதது, போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் தூத்துக்குடி ரயில் நிலையத்தை ஊருக்கு வெளியே உள்ள மீளவிட்டான் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Updated on
2 min read

போதிய வசதி இல்லாதது, போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் தூத்துக்குடி ரயில் நிலையத்தை ஊருக்கு வெளியே உள்ள மீளவிட்டான் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
தமிழகத்தில் கடல் வழி, தரைவழி, வான்வழி மற்றும் ரயில் பாதை என நான்குவழிப் போக்குவரத்தைக் கொண்ட நகரமாக திகழ்கிறது தூத்துக்குடி. 7 பெரிய துறைமுகங்களுக்குள் ஒன்றாக விளங்கும் தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் டன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல, தூத்துக்குடி- சென்னை இடையே தற்போது இயக்கப்பட்டு வரும் இரண்டு விமானங்கள் மூலம் தினமும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். தரைவழிப் போக்குவரத்தைப் பொருத்தவரை கனரக வாகனங்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சரக்குகள் கொண்டுவரப்படுகிறது. ஆனால், போதிய ரயில் வசதிகள் இல்லாததால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளுக்கு அதிக கட்டணத்தை லாரிகளுக்கு செலுத்தும் நிலை நீடித்து வருகிறது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் சரக்கு போக்குவரத்துக்காக அதிக வருவாய் ஈட்டித் தரும் தூத்துக்குடி ரயில் நிலையத்தின் வசதியை இன்னும் மேம்படுத்தினால் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என நீண்ட நாள்களாகவே சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு காரணம் போக்குவரத்து நிறைந்த நகரின் மையப்பகுதியில் ரயில் நிலையம் இருப்பதுதான்.
இதனால் ரயில் நிலையத்தை ஊருக்கு வெளியே அனைத்து வசதிகளையும் கொண்ட மீளவிட்டான் பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக வைக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மக்களவையிலும் தூத்துக்குடி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பயணிகள் நலன் மற்றும் சரக்கு போக்குவரத்தை கருத்தில்கொண்டு மீளவிட்டான் பகுதிக்கு ரயில் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
ஏன் மாற்ற வேண்டும்? தூத்துக்குடி மாநகர் வளர்ச்சி அடைவதற்கு முன்பே ரயில் நிலையம் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது அதிவேக வளர்ச்சியால் ரயில்வே தண்டவாளத்துக்கு இருபுறமும் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெருகிவிட்டன.
குறைந்த ரயில்களே தற்போது இயக்கப்பட்டு வந்தாலும் தினமும் 20-க்கும் மேற்பட்ட முறை 1ஆம் கேட், 2ஆம் கேட், 4ஆம் கேட் ரயில்வே கேட்கள் மூடப்பட்டு திறக்கும் நிலை உள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
தூத்துக்குடி ரயில் நிலையத்தின் யார்டில் இருந்து நடைமேடைக்கு ரயில்களை கொண்டு சென்று நிறுத்த வேண்டும் என்றால்கூட 1 மற்றும் 2ஆம் ரயில்வே கேட்டுகளை மூடவேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரயில் நிலையத்தை ஊருக்கு வெளியே உள்ள மீளவிட்டானுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், 1ஆம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதையும், 2ஆம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலமும் அமைக்கப்படும் என்று கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான ஆரம்பகட்டப் பணிகள்கூடத் தொடங்கப்படவில்லை.
ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைத்தால் சாலையின் இருபுறமும் உள்ள வணிக வளாகங்கள் பாதிக்கப்படும் என்றும், மழைக் காலத்தில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கிவிட்டால் எந்தவித பயனும் இருக்காது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஜனநாயக மக்கள் உரிமைக் கழக தூத்துக்குடி மாநகரத் தலைவர் எஸ். முருகன் கூறியது:
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கும், ரயில்வே கேட் பகுதிகளில் பாலம் கட்டவும், சுரங்கப்பாதை அமைக்கவும் வாய்ப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர், மாணவிகளுக்கு அதிகளவு பாதிப்பு உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாநகரில் இருந்து ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தொலைவில் எல்லா வசதிகளும் அமைந்துள்ள மீளவிட்டான் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தூத்துக்குடி ரயில் நிலையத்தை அங்கு இடமாற்றம் செய்தால் திருநெல்வேலியைப் போல கூடுதலான ரயில் சேவை வசதிகளை எளிதில் பெறலாம்.
மேலும்,  தூத்துக்குடி நகரில் இருந்து மீளவிட்டான் வரை தண்டவாளம் அகற்றப்படும் இடத்தில் வசதியான அளவுக்கு சாலை அமைத்தால், அதன் வழியாக பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோக்களை இயக்குவதன் மூலம் பயணிகள் எளிதாக மீளவிட்டானுக்கு சென்று வரமுடியும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com