குளங்களை தூர்வாருவதாகக் கூறி முறைகேடு: பல லட்சம் ரூபாய் மண் விற்பனை

: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குளங்களை தூர்வாருவதாகக் கூறி விதிமுறைகளை மீறி மண் அள்ளப்பட்டு வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Updated on
2 min read

: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குளங்களை தூர்வாருவதாகக் கூறி விதிமுறைகளை மீறி மண் அள்ளப்பட்டு வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வாரும் நோக்கில் குளங்களில் இருந்து மண், கிராவல் மண், சவுடு மண் ஆகியவற்றை விவசாயப் பணிகளுக்கோ அல்லது பொதுமக்கள் தங்கள் தேவைக்கோ உரிய ஆவணங்களை காட்டி அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம் என தொழில் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெயரில் வாங்கப்படும் அனுமதி சீட்டைக் கொண்டு வணிக ரீதியாக குளங்களில் மண் அள்ளப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், கீழவல்லநாடு கிராமத்தில் உள்ள பிராமணன் குளத்தில் இருந்து (புல எண். 443) முறைகேடாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சரள் மண் எடுக்கப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி அக்ரி எஸ். பரமசிவன் பல்வேறு புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.
அந்த மனு மீது சார்- ஆட்சியர் தீபக் ஜேக்கப் விசாரணை மேற்கொண்டதில் அதிகாரிகள் பலர் இந்த விதிமுறை மீறல் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ். பரமசிவன் கூறியது: பிராமணன் குளம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில், அந்தக் குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து மனு பெறப்பட்டதுபோல ஒரு கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் குளத்தின் பெரும்பாலான பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதால் வன உயிரிகளின் தண்ணீர் தேவைக்காக குளத்தை தூர்வார வேண்டும் என அப்போதைய வனச்சரக அலுவலர் நெல்லைநாயகம் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
வனத் துறையினர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில் 19.12.2016 அன்று கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட அலுவலகத்தில் இருந்து தனியார் பங்களிப்புடன் குளத்தை தூர்வாரலாம் என அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அனுமதி கடிதத்தை வைத்தும், மாவட்ட ஆட்சியரால் அறிவிப்பு வெளியிடப்பட்ட தொழில்துறை அரசாணை நகலை தவறாக பயன்படுத்தியும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மண் மற்றும் சரள் மண் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு வெளியாள்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் பலரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களில் அரசின் விதிமுறையை மீறி மண் எடுக்கப்படுவதாகவும், பரமசிவன் தெரிவித்தார்.
இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் கூறியது: பிராமணன் குளத்தில் விதிமுறையை மீறி மண் எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சார்- ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்றார்.
விதிமுறையை மீறி செயல்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குளத்தில் இருந்த அள்ளப்பட்டு வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்ட மண் எவ்வளவு என்பதை கண்டறிந்து உரிய தொகையை சம்பந்தப்பட்டோரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com