தூத்துக்குடியில் ஒருவழிப் பாதையில் விதிமுறையை மீறிச் செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து நிகழ்வதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறை முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகரில் டபுள்யூஜிசி சாலை மற்றும் வி.இ. சாலை ஆகிய இரண்டு சாலைகள் பிரதானமானவை. இந்தச் சாலைகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில், நகரின் மத்திய பகுதியான குரூஸ் பர்னாந்து சிலை அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்தால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் என்ற நிலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற காவலர்கள் பலர் அந்த வணிக வளாகத்தில் காவல் பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்து வந்தனர்.
இருப்பினும், வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வி.இ. சாலை, ஜின் பாக்டரி சாலைகளில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்தும் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக புகார் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு தூத்துக்குடி மாநகர காவல் உதவி ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செல்வநாகரத்தினம், போக்குவரத்து நெரிசல் தொடர்பான புகார்களை ஆய்வு செய்து பல்வேறு மாற்றங்களை செய்ய போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், முதல் கட்டமாக வி.இ. சாலையில் இருந்து ஜின் பாக்டரி சாலைக்கு செல்லும் பாதையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதேபோல, எட்டயபுரம் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து டபுள்யூஜிசி சாலைக்கு வரும் சாலையும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைந்தது. மேலும், சாலையோரத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்ததால் சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதும் குறைந்தது.
ஆனால், இந்த நடவடிக்கை கடந்த சில மாதங்களாகவே சரியாக கடைப்பிடிக்காத நிலை நீடித்து வருகிறது. ஒருவழிப் பாதையில் கனரக வாகனங்கள் விதிமுறையை மீறிச் செல்வதாலும், சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமன்றி நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டது.
இது தொடர்பாக பல்வேறு சமூக அமைப்பினர் புகார் தெரிவித்தும், காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளதாக அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் புகார் கூறுகின்றனர். வாகனச் சோதனை என்ற பெயரில் அதிகளவு அபராதம் விதிக்கும் போலீஸார், போக்குவரத்து நெரிசல் விவகாரத்திலும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து இந்திய ஜனநாய வாலிபர் சங்க மாவட்டச் செயலர் எம்.எஸ். முத்து கூறியது: மாநகரில் குறுகிய சாலைகளே உள்ள நிலையில் போக்குவரத்து விஷயத்தில் மாநகர போலீஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சாதாரண நாள்களில் கூட பண்டிகைக் கால அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் விதிமுறையை மீறி செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீஸார் முன்வர வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து மாநகர காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறியது: ஒருவழிப்பாதையில் விதிமுறையை மீறி செல்லும் நான்குசக்கர மற்றும் கனரக வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனாலும், பொதுமக்கள் சிலர் தொடர்ந்து விதிமுறையை மீறி வருகின்றனர். இதுதொடர்பாக கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.