5 மாதங்களாக நடத்தப்படாத மீனவர் குறைதீர் கூட்டம்: குறைகளை கேட்க அதிகாரிகள் தயங்குவதாக குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம்தோறும் நடத்தப்பட வேண்டிய மீனவர் குறைதீர் கூட்டம் கடந்த 5 மாதங்களாக நடக்காதது
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம்தோறும் நடத்தப்பட வேண்டிய மீனவர் குறைதீர் கூட்டம் கடந்த 5 மாதங்களாக நடக்காதது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் குறைகளைக் கேட்க அதிகாரிகள் தயங்குவதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மீனவர் குறைதீர் கூட்டம், சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, மகளிர் சுயஉதவிக் குழுவினர் குறைதீர் கூட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் அவ்வப்போது நடத்தப்படுவது உண்டு.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது மட்டும் இதுபோன்ற குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்படும். இதுதவிர, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படும் குறைதீர் கூட்டங்கள் அடுத்த சில வாரங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம்தோறும் நடத்தப்பட வேண்டிய மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம் கடந்த 5 மாதங்களாக நடத்தப்படவில்லை. கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மீன்வளத் துறை அதிகாரிகள் சரியாக கவனிக்கவில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர்கள் பொது பஞ்சாயத்து தலைவர் ராபர்ட் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழிலான மீன்பிடித் தொழிலில் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகு மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். தினமும் கடலுக்குச் சென்று மீன்படித்து வரும் மீனவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தனியாகவும், சங்க நிர்வாகிகள் மூலமும் மாதம்தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்து அதற்கான தீர்வை பெறுவது வழக்கம்.
மீனவர் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள், கடலோர காவல் படை, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார், வனத் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். அதனால் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் குறைகளுக்கு கூட்டத்திலேயே தீர்வு எட்டப்படுவதும் உண்டு.
ஆனால், கடந்த 5 மாதங்களாக மீனவர்களின் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் பிரச்னைகள், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட தொழில் சார்ந்த பிரச்னைகளால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்களது கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் மீனவர்களின் குறைதீர் கூட்டத்தை உடனடியாக நடத்த மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றார்.
இதுதவிர, தற்போது தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும், விசைப்படகுகளை பதிவு செய்வதில் உள்ள பிரச்னை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாலும் கூட்டத்தை நடத்த அதிகாரிகள் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல் சேவியர் கூறியது: ஒக்கி புயல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக குறைதீர் கூட்டத்தை நடத்த முடியவில்லை. மாவட்ட ஆட்சியர் மாநாடு காரணமாக மார்ச் மாதத்துக்கான கூட்டத்தை நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களுக்கான குறைதீர் கூட்டத்தை விரைந்து நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com