6 ஆண்டு இழுபறிக்கு பிறகு பணிகள் நிறைவு: தூத்துக்குடியில் படகு குழாம் தயார்

தூத்துக்குடியில் படகு குழாம் அமைப்பதற்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணிகள்,
Updated on
2 min read

தூத்துக்குடியில் படகு குழாம் அமைப்பதற்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணிகள், பல்வேறு இழுபறிக்கு பிறகு தற்போது நிறைவு பெற்றுள்ளன. விரைவில் மக்கள் படகு சவாரியை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நகரமான தூத்துக்குடியில் பொழுதுபோக்குக்கு போதிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. இருப்பினும், கடந்த 2012 ஆம் ஆண்டு முத்துநகர் கடற்கரை சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் விடுமுறை நாள்களில் அங்கு கூடி வருகின்றனர். இதுதவிர, புதிய துறைமுகம் கடற்கரை, ரோச் பூங்கா, ராஜாஜி பூங்கா ஆகியவை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக உள்ளன.
இந்நிலையில், தூத்துக்குடியில் படகு குழாம் அமைக்கப்படும் என கடந்த 2012 ஆம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு தூத்துக்குடி ரோச் பூங்கா எதிரே மேற்கு பகுதியில் ஏறத்தாழ 850 மீட்டர் நீளமும், 200 மீட்டம் அகலமும் கொண்ட, துறைமுகத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பில் படகு குழாம் அமைக்க தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. 
அந்தப் பகுதியில் படகு தளம் அமைக்கப்பட்டு, தலா ரூ. 70 ஆயிரம் மதிப்பில் 7 படகுகள் வாங்கப்பட்டது. காலால் மிதிக்கும் வகையில் உள்ள அந்தப் படகுகள் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டன. ஆனால், படகு குழாம் அமையும் இடத்தில் ஆழம் மிகவும் குறைவாக இருந்ததால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் ரூ. 2 கோடி மதிப்பில் படகு குழாம் மற்றும் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. ரூ.1 கோடி செலவில் படகு குழாமை தூர்வாரி பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யவும், ரூ. 1 கோடி செலவில் சிறுவர் விளையாட்டு பூங்கா, புல்வெளிகள், நடைபாதை போன்றவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்தப் பணிகள் நடைபெறுவதிலும் தொய்வு ஏற்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளாக இழுபறி நீடித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வஉசி துறைமுக பங்களிப்புடன் ரூ. 1.20 கோடியில் படகு குழாம் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக, வஉசி துறைமுகம் ரூ. 80 லட்சத்தையும், மாநகராட்சி நிர்வாகம் ரூ. 40 லட்சத்தையும் ஒதுக்கீடு செய்தது.
தற்போது படகு நிறுத்தும் இடங்கள், பூங்கா, மின்விளக்கு வசதி, பயணிகள் ஓய்வெடுக்க இருக்கைகள், பிரதான சாலையில் இருந்து படகு குழாமுக்கு செல்ல சாலை வசதி, சிறுவர்களுக்கான பூங்கா ஆகியவை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. 
படகு குழாம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை அடைந்த நிலையில், புதிதாக 10 படகுகள் வாங்குவதற்கு மாநராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்தப் பணிகள் இன்னும் ஒரு வாரத்துக்குள் நிறைவு பெறும் எனவும், அதன் பின்னர் படகு குழாம் திறக்கப்பட்டு படகு சவாரி தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியது:
படகு குழாம் அமைப்பதற்கான அனைத்துப் பணிகளும் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. மின் இணைப்பு பெற வேண்டியதும், சில மின் கம்பங்கள் நடும் பணிகளும் மட்டுமே முடிவடையாமல் உள்ளன. ஒரு வாரத்துக்குள் அந்தப் பணிகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு படகு குழாம் செயல்படத் தொடங்கும். மக்கள் உற்சாகமாக படகு சவாரி செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com