விளைபொருள்களை பாதுகாக்க கிடங்குகள் உருவாக்கப்படும்: கனிமொழி

விவசாயிகளின் விளை பொருள்களைப் பாதுகாக்கும் வகையில், கிடங்குகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
Updated on
1 min read

விவசாயிகளின் விளை பொருள்களைப் பாதுகாக்கும் வகையில், கிடங்குகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி.  
கோவில்பட்டியில், பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். 
கூட்டத்தில் கனிமொழி பேசியது: நாட்டின் ஜனநாயகத்தை, அடிப்படையை காப்பாற்றுவதற்காக, பெண்களின் உரிமைக்காக நாம் சந்திக்கக் கூடிய தேர்தல் இது. நாடு முழுவதும் இருக்கக் கூடிய ஒவ்வொருவரும் இந்த புரிதலோடுதான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தமிழ் இருக்கக் கூடாது, ஹிந்தி தான் நாடு முழுவதும் பேசக்கூடிய ஒற்றை மொழியாக இருக்க வேண்டும் என கருதி செயல்படுகிறது மத்திய பாஜக அரசு. கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயாரிப்பவர்கள் 18 சதவீத சரக்கு, சேவை வரியால் பாதிக்கப்பட்டு, அந்த ஆலைகளை மூட வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி காட்டுவேன் என பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை தான் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 
மாவட்டத்தில் விவசாயிகளுக்குப் பயன்படக் கூடிய விதத்தில், விளை பொருள்களைப் பாதுகாக்கக் கூடிய கிடங்குகளை உருவாக்க திமுக  நடவடிக்கை எடுக்கும். 
கயத்தாறு, கோவில்பட்டி பகுதிகளில் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு, கயத்தாறில் உள்ள விமான நிலையத்தை செயல்படுத்த, குறைந்தபட்சப் பொருள்களை ஏற்றிச் செல்லும் விமான நிலையமாக செயல்பட சாத்தியத்தை உருவாக்கித் தருவோம் என்றார் அவர். 
கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமிபாண்டியன்,  திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன், மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
தொடர்ந்து, வேட்பாளர் கனிமொழி கூட்டணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com