வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பாவூர்சத்திரம், சுரண்டை, கடையநல்லூர் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
பாவூர்சத்திரம் காமராஜர் நகரில் உள்ள அருள்மிகு வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாயொட்டி, முற்பகலில் மூலமந்த்ர ஹோமம், பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், கும்பாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.
மாலையில் சாயரக்சை, சுவாமி வீதியுலா வருதல், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், குறும்பலாப்பேரி ஊர் மக்கள் செய்திருந்தனர்.
சுரண்டை: வரகுணராமபுரம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி மாலையில் குற்றாலத் தீர்த்தம் எடுத்து வருதல், இரவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து மலர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருள வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகுருநாதபுரம் திருமலைக்குமாரசுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகமங்கலம் கோயிலில்களில்...
சேர்ந்தபூமங்கலம் மற்றும் ஆறுமுகமங்கலம் கோயில்களில் சனிக்கிழமை வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, சேர்ந்தபூமங்கலம் ஸ்ரீகைலாசநாத சுவாமி சமேத சௌந்தர்ய நாயகி அம்பாள் கோயிலிலில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக செல்வசுந்தர விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம் புறப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் ஸ்ரீ இளைய நயினார் கோயிலிலில் விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர், வள்ளி, தெய்வானை மற்றும் இளைய நயினாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கொட்டங்காடு கோயிலில்...
உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு பவளமுத்து விநாயகர் மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.
சனிக்கிழமை பகல் 12 மணிக்கு சிறப்பு பௌர்ணமி பூஜை, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா பெ.சுந்தரஈசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.