தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு யோகா பயிற்சி
By DIN | Published On : 01st April 2019 02:12 AM | Last Updated : 01st April 2019 02:12 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலையொட்டி, தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தருவை மைதானத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா மூலம் புதிய முயற்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்க வேண்டும், வாக்காளர்கள் பரிசுபொருள்களோ, பணமோ பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாணவர், மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை நிகழ்த்தினர்.
சிறிய வகை மண் கலயம் மீது நின்றபடி மாணவர்கள் செய்த யோகாசனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, ஆட்சியரின் துணைவியார் அத்யாஷா நந்தூரி, மக்கள் தொடர்பு அலுவலர் வெ. சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.