மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை: கனிமொழி உறுதி
By DIN | Published On : 01st April 2019 02:14 AM | Last Updated : 01st April 2019 02:14 AM | அ+அ அ- |

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கூறினார்.
ஆத்தூரில் ரத வீதிகள், பேருந்து நிலையம், முஸ்லிலிம் தெரு உள்பட பல்வேறு பகுதிகள், சேர்ந்தபூமங்கலம், புன்னைக்காயல் மற்றும் தெற்கு ஆத்தூர் பகுதியில் கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது: மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மக்களை பிளவுபடுத்தி அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம், தமிழகத்தில் மீனவர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே, திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.
ஆறுமுகனேரி, பேயன்விளை, எஸ்.ஆர்.எஸ். கார்டன், பிரதான பஜார், அம்மன் கோவில் தெரு, செல்வராஜபுரம், காந்தி மைதானம், லட்சுமி மாநகரம், பூவரசூர், மடத்துவிளை, காமராஜ்புரம் உள்பட பல இடங்களில் வாக்கு சேகரித்த அவர் பேசியது: பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்ததை விட வேறு எந்த சாதனையும் செய்யவில்லை. 2014 இல் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன், கல்விக் கடன் ஆகியவை தள்ளுபடி, இளைஞர்களுக்கு சாலைப் பணியாளர் பணி, பெண்களுக்கு மக்கள் நலப் பணியாளர்கள் பணி அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப் பட்டுள்ளது.
திமுக அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆகவே, மக்களவைத் தேர்தலிலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
பிரசாரத்தில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், ஆழ்வை ஒன்றியச் செயலர் நவீன்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமஜெயம், விவசாய அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் பகுதியில்....
திமுக வேட்பாளர் கனிமொழி, ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் பகுதிகளில் வாக்குசேகரித்தார்.
தெற்குநல்லூர் நாகன்னியாபுரத்தில் பிரசாரத்தை தொடங்கிய கனிமொழி, மூலக்கரை, கந்தன்குடியிருப்பு, அம்மன்புரம் பஜார், குரங்கன்தட்டு, சுற்று வட்டாரங்களில் பிரசாரம் செய்தார். மாலையில் ஆலந்தலையில் தொடங்கிய அவர், அமலிநகர், பிரசாத் நகர், ராஜ்கண்னா நகர், குறிஞ்சி நகர், வீரபாண்டியன்பட்டணம், சுற்று வட்டாரங்களில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில், மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.