விளாத்திகுளம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 01st April 2019 02:13 AM | Last Updated : 01st April 2019 02:13 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திமுக: வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட மேட்டுப்பட்டி, சித்தவநாயக்கன்பட்டி, வேலிடுபட்டி, சிங்கிலிபட்டி, கல்குமி, பேரிலோவன்பட்டி, முதலிபட்டி, சுப்பிரமணியபுரம், சிவஞானபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அதிமுக: விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக தேர்தல் காரியாலயத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்து, சின்னப்பனை ஆதரித்து, விளாத்திகுளம் பிரதான வீதிகளில் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின் போது, அதிமுக வேட்பாளர் பி.சின்னப்பன், கட்சியின் அமைப்பு செயலர்கள் சி.த.செல்லப்பாண்டியன், சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமமுக: விளாத்திகுளம் - மதுரை நெடுஞ்சாலையில் அமமுக தேர்தல் காரியாலயத்தை அமமுக விளாத்திகுளம் ஒன்றிய செயலர் ரூபம் வேலவன் முன்னிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் சுந்தர்ராஜ் திறந்துவைத்தார்.
பின்னர் விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் ஜோதிமணி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் புவனேஸ்வரன் ஆகிய இருவரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் திறந்த ஜீப்பில் அயன் கரிசல்குளம், மாவில்பட்டி, ராசாப்பட்டி, மேலக்கரந்தை, தாப்பாத்தி, கருப்பூர், கோட்டூர், நம்பிபுரம்,கல்குமி, சிங்கிலிபட்டி உள்ளிட்ட 24 கிராமங்களில் வாக்கு சேகரித்தனர்.
சுயேச்சை வேட்பாளர் மார்க்கண்டேயன்: சுயேச்சையாகப் போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி. மார்க்கண்டேயன் விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட பசுவந்தனை, சில்லாங்குளம், கீழமுடிமண், மேலமுடிமண், வெங்கடாசலபுரம், வெள்ளாரம், கச்சேரி தளவாய்புரம், ஜெகவீரபாண்டியபுரம், எப்போதும்வென்றான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.