குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த இக்கோயிலில், நிகழாண்டு சித்திரை பெருந்திருவிழா புதன்கிழமை (ஏப்.10) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து நந்தியம்பெருமான், பலிபீடம், கொடிமரத்துக்கு பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
மாலை 6.30 மணிக்கு அப்பர் அடிகள் உழவாரப்பணி வீதியுலா, இரவு 7 மணிக்கு ஆவாகனச் சீவிலி ரிஷப வாகனத்தில் ஸ்ரீபெலிநாதர் வீதியுலா, இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள் கேடயச் சப்பரத்தில் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
அறம் வளர்த்த நாயகி திருக்கூடத்தில் மாலையில் தேவாரப் பண்ணிசை, வேலாண்டி ஓதுவாரின் சமயச் சொற்பொழிவு நடைபெற்றது.
தொடர்ந்து விழா நாள்களில் தினமும் காலை 8 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதியுலா, இரவு 8 மணிக்கு சுவாமி- அம்பாள் கேடய, ரிஷப வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.
தினமும் மாலை 6.30 மணிக்கு அறம் வளர்த்த நாயகி திருக்கூடத்தில் தேவாரப் பண்ணிசை, சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும்.
ஏப்.15ஆம் தேதி காலை 7.30 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி, ஏப்.16ஆம் தேதி காலை 8 மணிக்கு நடராஜமூர்த்தியை படி இறக்குதல், சிறப்பு அபிஷேகம், இரவு 8 மணிக்கு நடராஜமூர்த்தி சிவப்பு சாத்தியில் வீதியுலா ஆகியன நடைபெறும்.
ஏப். 17ஆம் தேதி காலை 5.30 மணிக்கு நடராஜமூர்த்தி வெள்ளை சாத்தியில் வீதியுலா, 9 மணிக்கு நடராஜமூர்த்தி பச்சை சாத்தியில் வீதியுலா, மாலை 5 மணிக்கு கங்காளநாதர் சந்திரசேகரர் வீதியுலா நடைபெறும். ஏப்.19ஆம் தேதி திருப்பொற்சுண்ணம் இடித்தல், இரவு 8 மணிக்கு சுவாமி கேடயத்திலும், அம்பாள் பல்லக்கிலும் வீதியுலா நடைபெறும். மாலை 6 மணிக்கு சித்ரா பௌர்ணமி சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஏற்பாடுகளை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் சி.குமரகுரு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.