மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க 1000 சக்கர நாற்காலிகள்: ஆட்சியர்
By DIN | Published On : 12th April 2019 07:22 AM | Last Updated : 12th April 2019 07:22 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க 1000 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், அவரது சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியது:
வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி சனிக்கிழமை நிறைவடையும். இம் மாவட்டத்தில் தேர்தலில் பணிபுரியவுள்ள 8500 வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் 3000 காவலர்களுக்கு சனிக்கிழமை (ஏப்.13) இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது.
தூத்துக்குடி தொகுதிக்கு உள்பட்ட 700 வாக்குச் சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளும் நடைபெற உள்ளன. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 239 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மத்திய அரசு தேர்தல் நுண் பார்வையாளர்களிடம் பதற்றமான வாக்குசவடிகளின் நிலைமைகளை அவ்வப்போது தேர்தல் பார்வையாளர், அதிகாரிகள் தெரியப்படுத்துவர்.
கூடுதலாக மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். தூத்துக்குடி தொகுதியில் 10 ஆயிரத்து 500 மாற்றுதிறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க 1000 சக்கர நாற்காலிகள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் ரூ. 1 கோடியே 45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் உரிய ஆவணங்கள் வழங்கியவர்களின் ரூ. 35 லட்சம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.