கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
By DIN | Published On : 17th April 2019 08:49 AM | Last Updated : 17th April 2019 08:49 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலின் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடைபெற்றன.
11ஆம் திருநாளான திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜையும், பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலிலிருந்து புறப்பட்டு பிரதான சாலையில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தெப்பத்திற்கு வந்தடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தை 9 சுற்று சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம், துணைத் தலைவர் செல்வராஜ், கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...