கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்
By DIN | Published On : 04th August 2019 12:58 AM | Last Updated : 04th August 2019 12:58 AM | அ+அ அ- |

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இலுப்பையூரணி ஊராட்சி கூசாலிபட்டி பகுதியில் நீரோடை, நீர்நிலைகள் மற்றும் மயானத்துக்குச் செல்லும் பாதைகளை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதை வருவாய்த் துறையினர் அகற்றாததைக் கண்டித்து, வருகிற செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலட்சுமி, இலுப்பையூரணி ஊராட்சி செயலர் ரத்தினகுமார், காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பாஜக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முனியசாமி, அமமுகவைச் சேர்ந்த மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். இம்மாதம் 10ஆம் தேதிக்குள் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம் முறைப்படி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட முடிவுகளை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.