தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் போலீஸார் திடீர் சோதனை
By DIN | Published On : 06th February 2019 07:10 AM | Last Updated : 06th February 2019 07:10 AM | அ+அ அ- |

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸார் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பெண்கள் வார்டு பகுதியில் சுற்றித் திரிந்தவர்களை விரட்டியடித்தனர். தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் இரவு நேரங்களில் தங்கியிருக்க ஒரு நபருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலர் மருத்துவமனைக்குள் இரவு நேரங்களில் தேவையில்லாமல் நடமாடி வருவதாகவும், நோயாளிகளுடன் இருப்போரிடம் இருந்து செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களை திருடிச் செல்வதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் முத்து தலைமையில் போலீஸார் மருத்துவமனையில் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென சோதனை மேற்கொண்டனர்.
மருத்துவமனையில் உள்ள 5 தளங்களிலும் நடத்திய சோதனையின்போது அங்கு அனுமதியின்றி இருந்தவர்கள் மற்றும் பெண்கள் வார்டு பகுதிகளில் சுற்றித்திரிந்த ஆண்களையும் போலீஸார் வெளியே விரட்டியடித்தனர். அப்போது, நோயாளிகளுடன் இருந்த சிலரும் வெளியேற்றப்பட்டதால் அவர்கள் இரவு நேரத்தில் தங்க இடமின்றி தவித்தனர்.
இருப்பினும், இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் வெளி ஆள்கள் நடமாட்டம் குறித்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...