கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 10th February 2019 12:44 AM | Last Updated : 10th February 2019 12:44 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் வாகன ஓட்டுநர்கள், சிற்றுந்து ஓட்டுநர்கள், போக்குவரத்து காவல் துறை, மோட்டார் வாகன ஆய்வாளர், காவல்துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமை வகித்தார். மேற்கு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், போக்குவரத்து காவல் உதவிஆய்வாளர் சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட கயத்தாறு, கழுகுமலை, கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கொப்பம்பட்டி, நாலாட்டின்புத்தூர், இளையரசனேந்தல் ஆகிய பகுதிகளிலிருந்து வேன் ஓட்டுநர்கள், சிற்றுந்து ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.
டி.எஸ்.பி. பேசியது: சிற்றுந்துகளை ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் முறையாக இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நிறுத்தத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும். அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் சிற்றுந்துகள் பிரதானச் சாலையில் குறைந்த வேகத்தில் சென்று பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்வதை தவிர்க்க வேண்டும். ஓட்டுநர், நடத்துனர்கள் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். முறையான உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
வாடகைக்கு வாகனங்களை அழைத்துச் செல்வோரின் அடையாள அட்டை போன்ற முகவரி விவரங்களை சேகரித்த பின்னர் தான் பயணத்திற்கு வருவதாக தெரிவிக்க வேண்டும், மது அருந்தியோ, செல்லிடப்பேசி பேசியவாறோ வாகனங்களை ஓட்டக் கூடாது. ஓட்டுநர்கள் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.