தாங்கைகுளத்தில் விதிமுறை மீறி மணல் அள்ளப்படுவதாக புகார்
By DIN | Published On : 12th February 2019 04:45 AM | Last Updated : 12th February 2019 04:45 AM | அ+அ அ- |

உடன்குடி அருகே தாங்கைகுளத்தில் விதிமுறை மீறி மணல் அள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் மு.வெற்றிவேல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு;
உடன்குடி தாங்கைகுளத்தில் விவசாயத் தேவைக்கு எனக் கூறி தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. இதனால் இக்குளத்தைச் சுற்றி நடைபெறும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. உடன்குடி அனல்மின் நிலையப் பணிகளுக்கு மணல் தேவை என்பதால், அங்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக கூறுகின்றனர்.
அனல்மின் நிலையத்திற்கு மணல் தேவை என்றால் அரசு சட்டத்தைத் திருத்தி நேரடியாக மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுக்கலாம். விதிமுறையை மீறி விவசாயத்துக்கு என மணல் எடுக்கப்பட்டு, அனல்மின் நிலைய பணிகளுக்கு கொண்டு செல்லப்படுவது சட்ட விரோதம். இது குறித்து தட்டி கேட்கும் பொது மக்களுக்கு மணல் அள்ளுபவர்கள் மிரட்டல் விடுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.