துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த நடவடிக்கை: மறுவாழ்வு ஆணைய உறுப்பினர்
By DIN | Published On : 12th February 2019 06:53 AM | Last Updated : 12th February 2019 06:53 AM | அ+அ அ- |

துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் தேசிய துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மணி.
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற, ஊரகப் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் பேசியது: தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டினம் ஆகிய நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றக்கூடிய துப்புரவுப் பணியாளர்கள் பணியின்போது பாதுகாப்புக்கு பயன்படுத்தக்கூடிய பொருள்களை நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும்.
துப்புரவுப் பணியாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அவர்களுக்கு பல்வேறு வகையிலான நோய் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளதால், மருத்துவ முகாம்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்த வேண்டும். இந்த முகாம்களில் அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை அவசியம் செய்ய வேண்டும்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும். மேலும், அவர்களது வாரிசுதாரர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வி பயிலும் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு வசிப்பதற்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகள், பிரச்னைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் பணி அர்ப்பணிப்பு நிறைந்த, அத்தியாவசியமான பணியாகும். எனவே, மற்ற அலுவலர்கள் அவர்களுடன் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற இடைவெளிகள் இல்லாத வகையில் புள்ளிவிவரங்கள் இருக்க வேண்டும். தவறான புள்ளிவிவரங்களைக் கண்டறிந்து இதுவரை 25 அலுவலர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமாசங்கர், தாட்கோ மாவட்ட திட்ட மேலாளர் ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் மற்றும் டூவிபுரம் 5ஆவது தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை தேசிய துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மணி ஆய்வு செய்தார். மேலும், துப்புரவுப் பணியாளர்களின் குறைகளை அவர் நேரில் கேட்டறிந்தார்.