தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
By DIN | Published On : 12th February 2019 04:50 AM | Last Updated : 12th February 2019 04:50 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் தலைமை வகித்துப் பேசியதாவது:
வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு தேவையான வாகன வசதிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடர்பாகவும், அங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் முன்னதாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் வாக்குச்சாவடி மண்டல வரைபடம், வட்ட அளவிலான வரைபடம் தயார் செய்திட வேண்டும். தேர்தல் வரவு-செலவு கணக்குகளை எவ்வாறு தயார் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அறிந்து அதன்படி செய்ய வேண்டும். அஞ்சல் வாக்குகள் அனுப்புவது தொடர்பாகவும், வாக்குச் சாவடிகளை தொடர்பு கொள்ளும் திட்டம் தொடர்பாகவும், பொதுமக்களிடமிருந்து கேட்கப்படும் தகவல்களுக்கு தகவல் வழங்க மாவட்ட தகவல் மையம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கு அறிக்கை அனுப்புதல் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், தேர்தல் வட்டாட்சியர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.