நகை, பணம் திருட்டுப்போனதாக நாடகம்: பெண் உள்பட 3 பேர் கைது
By DIN | Published On : 12th February 2019 06:51 AM | Last Updated : 12th February 2019 06:51 AM | அ+அ அ- |

நாசரேத் அருகே வீட்டில் இருந்த நகை , பணத்தை நண்பருக்கு கொடுத்துவிட்டு திருட்டுப் போனதாக நாடகமாடிய பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (43). இவர் நாசரேத்தில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலா (39). இவர்களது வீட்டில் 8 பவுன் நகையும், ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கமும் திருட்டுப் போனதாக நாசரேத் காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்தார். சாத்தான்குளம் டி.எஸ்.பி. பாலச்சந்திரன், நாசரேத் காவல் ஆய்வாளர் ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தியதில் தெரியவந்த தகவல்கள்:
விமலாவுக்கும் முதலைமொழியைச் சேர்ந்த வெள்ளைமணி மகன் மோசஸ் (32) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாம். அவர் கேட்டதால் சில மாதங்களுக்கு முன்பு 8 பவுன் தங்க நகையை அடகுவைக்க விமலா கொடுத்தாராம். அந்த நகையை எங்கே என கணவர் கேட்டதால், அடகு வைத்த நகையை திருப்புவதற்காக ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்தையும் மோசஸுக்கு கொடுத்துள்ளார். ஆனால், திருப்பிய நகையை மோசஸ் பிரகாசபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான இஸ்ரவேலிடம் கொடுத்துவைத்தாராம். இதனால் பயந்துபோன விமலா, வீட்டில் இருந்த பணம், நகை திருட்டுப் போனதாக புகார் அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து, விமலா, மோசஸ், இஸ்ரவேல் ஆகியோரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆறரை பவுன் தங்க நகையையும், ரூ. 92 ஆயிரம் ரொக்கத்தையும் மீட்டனர்.