திருச்செந்தூரில் கோயில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 12:40 AM | Last Updated : 04th January 2019 12:40 AM | அ+அ அ- |

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பணியாளர்கள், 7-ஆவது ஊதியக்குழு ஊதியத்தை அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் வழங்க வலியுறுத்தி இணை ஆணையர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 47 முதுநிலை கோயில்களும், 38 ஆயிரம் சிறிய கோயில்களும் உள்ளன. இந்த கோயில்களில் சுமார் 50 ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்னர். இவர்கள் தங்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு ஊதியத்தை அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்கக் கோரி ஆறு கட்ட போராட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தனர். அப்போது தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 7-ஆவது ஊதியக்குழு ஊதியத்தை 6 மாத காலத்திற்குள் வழங்குவதாகவும், அதுவரை போராட்டம் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அதன்படி கோயில் பணியாளர்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர். இந்நிலையில் தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பணியாளர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோயில் இணை ஆணையர் அலுவலக முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பணியாளர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ஆறுமுகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 10 பெண்கள் உள்பட 80 பேர் கலந்து கொண்டனர்.