"திருச்செந்தூரில் முழுமையான ஆய்வுக்குப் பிறகே புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்'
By DIN | Published On : 04th January 2019 12:36 AM | Last Updated : 04th January 2019 12:36 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என, குடிநீர் வடிகால் வாரிய மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் எட்வர்டு அமல்ராஜ் தெரிவித்தார்.
திருச்செந்தூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் பங்கேற்ற புதைசாக்கடைத் திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் எட்வர்டு அமல்ராஜ் தலைமை வகித்தார். கண்காணிப்புப் பொறியாளர் லட்சுமிதேவி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், குடிநீர் வடிகால் வாரிய தூத்துக்குடி கோட்ட நிர்வாகப் பொறியாளர் பூமாரி, உதவி நிர்வாகப் பொறியாளர் அமல் அன்பரசு, உதவிப் பொறியாளர் அர்ஜுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் பா. பாரதி, உதவி ஆணையர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வேலுச்சாமி, சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன், ஒன்றிய திமுக செயலர் செங்குழி ரமேஷ், நகரப் பொறுப்பாளர் வாள் சுடலை, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் மணல்மேடு சுரேஷ், ராஜ்மோகன், பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆறுமுகம், வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதை சாக்கடைத் திட்டத்தில் அனுமதியின்றி குடியிருப்புகள், விடுதிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களிலிருந்து குழாய்கள் இணைக்கப்பட்டதால்தான் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் முதல் 15 லட்சம் லிட்டர் வரை கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, எல்லப்பநாயக்கன் குளத்தின் வடிகாலில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீரை விவசாயிகளோ, தனியார் தொழிற்சாலைகளோ பெற்றுக்கொள்ளலாம் என, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "புதை சாக்கடைத் திட்டமே செயலற்ற நிலையில் உள்ளது. வீடுகளிலிருந்து சிறிய குழாய்கள் மூலம் எவ்வாறு கழிவுநீர் வெளியேறும்? கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் மீண்டும் வடிகால் வாய்க்காலிலேயே கலக்கிறது. திருச்செந்தூர் கோயில் பகுதி விடுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் புதை சாக்கடைத் திட்ட கழிவுநீர்த் தொட்டி வழியாக வெளியேறி தெருவில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது' என்றனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர்: இத்திட்டம் 4,600 இணைப்புகளுடன் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 542 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 42 குடியிருப்பு, வணிக இணைப்புகளே இணைக்கப்பட்டுள்ளன. முழுவதுமாக இணைப்பு கொடுக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நிறைவடைந்த பிறகே பேரூராட்சி வசம் இத்திட்டம் வரும். மேலும், கோயில் சார்பில் இணைப்புக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 50 லட்சம் இதுவரை வழங்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து, மக்களின் கருத்தைக் கேட்டறிந்த தலைமைப் பொறியாளர், இத்திட்டத்தில் உள்ள சிக்கலையும், மக்களின் கருத்தையும் அறிய பொறியாளர் குழு அமைக்கப்படும். அக்குழுவினர் முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர் என்றார்.
தொடர்ந்து, திருச்செந்தூர்-குலசேகரன்பட்டினம் சாலையில் புதை சாக்கடைத் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தையும், அங்கிருந்து வெளியேறும் நீரின் வழித்தடத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.