தூத்துக்குடியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: ஒரே நாளில் 1,473 கிலோ நெகிழிகள் பறிமுதல்
By DIN | Published On : 04th January 2019 12:37 AM | Last Updated : 04th January 2019 12:37 AM | அ+அ அ- |

பதினான்கு வகை நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வியாழக்கிழமை நடத்திய திடீர் ஆய்வில், 1473 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அரசு தடை விதித்துள்ள நிலையில், அதை தூத்துக்குடி மாவட்டத்தில் முழுமையாக அமல்படுத்தும் வகையில், அதிகாரிகள் குழுவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி விவிடி சிக்னல் முதல் 3 ஆம் மைல் வரையில் பல்வேறு கடைகளில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 வகையிலான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என வியாபாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும், நெகிழிக்கு மாற்றாக துணிப்பைகள், வாழை இலை, மண் பாண்டங்கள், பாக்குமர இலை தட்டுகள் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
1816 கிலோ பறிமுதல்: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் ஜனவரி 1 ஆம் தேதி அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, ஜன. 2இல் 343 கிலோ நெகிழிப் பொருள்களையும், வியாழக்கிழமை 1,473 கிலோ நெகிழிப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இதுவரை 1,816 கிலோ நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.