தூத்துக்குடியில் பன்னாட்டு நிறுவனத் தயாரிப்பு பிளாஸ்டிக் பொருள்களை எரித்து போராட்டம்
By DIN | Published On : 04th January 2019 07:34 AM | Last Updated : 04th January 2019 07:34 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில், பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை எரித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நிய நாட்டுப் பொருள்களைத் தடைசெய்யவும், உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்தவும் வலியுறுத்தி தூத்துக்குடியில் வியாபாரிகள் சங்க அலுவலகம் முன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தலைமையில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
அப்போது, பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் என்ற பெயரிலும், அபராதம் என்ற பெயரிலும் அதிகாரிகள் வரம்பு மீறி செயல்படுவதாகவும், தடைசெய்யப்படாத பொருள்களைப் பறிமுதல் செய்வதாகவும் வெள்ளையன் குற்றம்சாட்டினார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டோர் பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை எரித்தனர். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தீயை அணைத்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் வெள்ளையன் கூறும்போது, மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதனிடையே, ஆய்வில் ஈடுபடும் அதிகாரிகள், தடை செய்யப்படாத பொருள்களையும் பறிமுதல் செய்வதாக வியாபாரிகள் சிலர் குற்றம்சாட்டி, பொருள்களைப் பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களை சிறைபிடித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.
தடை செய்யப்படாத பொருள்களைப் பறிமுதல் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் வலியுறுத்தியதால் மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்திய வாகனத்தை போலீஸார் மத்திய பாகம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், த. வெள்ளையனும், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸை சந்தித்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்தனர்.