காயல்பட்டினத்தில் நெகிழி பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 07th January 2019 06:20 AM | Last Updated : 07th January 2019 06:20 AM | அ+அ அ- |

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதி கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மறுசுழற்சி செய்ய இயலாத நெகிழி பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை அடுத்து, இதனை கண்காணிக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினம் நகராட்சி சார்பில் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்களுக்கு நெகிழி பொருள்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இங்குள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ். பொன்வேல்ராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 69 கிலோ எடையுள்ள நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக்கூடாது எனவும், மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.