கோவில்பட்டியில் துப்புரவு தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 07th January 2019 06:26 AM | Last Updated : 07th January 2019 06:26 AM | அ+அ அ- |

தமிழ்நாடு துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை வாகனப் பிரசாரப் பயணம் மேற்கொள்வது; சென்னையில் மாநாடு நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தீர்மானங்கள்: துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18ஆயிரம் வழங்க வேண்டும்; அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; தொழிலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்; தூய்மை தொழிலாளர் நல வாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்; இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பூதியமாக ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும்; பணிக்கொடை ரூ.5 லட்சம், ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் செல்லையா வரவேற்றார். செயலர் முருகேசன் நன்றி கூறினார்.