ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 03rd July 2019 06:57 AM | Last Updated : 03rd July 2019 06:57 AM | அ+அ அ- |

தூத்துக்குடி அருகே ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள சம்படி புதுநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). சுமை ஆட்டோ ஓட்டுநர். இவர், கடந்த 2016, ஆகஸ்ட் 27 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள பெரும்படை சாஸ்தா கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ரமேஷை வழிமறித்த 3 பேர் அவரை வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த சாயர்புரம் போலீஸார் புதுநகரைச் சேர்ந்த பாலமுருகன், அவரது நண்பர்கள் முக்காணியைச் சேர்ந்த குமரன், இளையபெருமாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கெளதமன் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். குமரன், இளையபெருமாள் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.