கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்'
By DIN | Published On : 09th June 2019 12:56 AM | Last Updated : 09th June 2019 12:56 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் கலை விருது பெற விண்ணப்பிக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-2019ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் கலை பண்பாட்டுத் துறையின் துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட கலை மன்றம் மூலம் வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட உள்ளது. எனவே, இம்மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல் பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கணியான்கூத்து, ஓவியம், சிற்பம், அரசன்-அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன்-குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக் கலை), வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 வயதுக்குள்பட்டோருக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதுக்குள்பட்டோருக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதுக்குள்பட்டோருக்கு கலை சுடர்மணி விருதும், 51 முதல் 60 வயதுக்குள்பட்டோருக்கு கலை நன்மணி விருதும், 61 வயதுக்கு மேற்பட்டோருக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், 870-21 அரசு அலுவலர் ஆ குடியிருப்பு, திருநெல்வேலி 627007 என்ற முகவரிக்கு ஜூன் 17ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0462- 2553890 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.