மந்தகதியில் மணிநகர் ஆற்றுப்பாலப் பணி: விரைந்து முடிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 09th June 2019 12:54 AM | Last Updated : 09th June 2019 12:54 AM | அ+அ அ- |

மந்தகதியில் நடைபெற்று வரும் மணிநகர் ஆற்றுப்பாலப் பணியை, மழைக்காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம், பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட மணிநகரில் கருமேனியாற்றின் குறுக்கே தரைநிலைப் பாலம் இருந்தது. மழைக்காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மணிநகரிலிருந்து செல்லும் உடன்குடி- திசையன்விளை சாலை துண்டிக்கப்படும். இதனால் உடன்குடி திசையன்விளைக்கு பெரியதாழை வழியாக சுமார் 20 கி.மீ. தொலைவு அதிகமாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ முயற்சியில், ரூ.6 கோடி மதிப்பில் உயர்நிலைப் பாலம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த 4 மாதத்துக்கு முன்பு பாலப் பணி தொடங்கியது. இதில் தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. மற்ற பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தற்காலிகமாக போடப்பட்டுள்ள மாற்றுச்சாலை மழைக்காலங்களில் அதிக வெள்ளம் வரும்போது அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது. எனவே, மழைக் காலத்துக்கு முன்பாக பாலப்பணியை துரிதமாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.