குறுக்குச்சாலை பகுதியில் நன்றி தெரிவித்தார் கனிமொழி
By DIN | Published On : 14th June 2019 06:50 AM | Last Updated : 14th June 2019 06:50 AM | அ+அ அ- |

தமிழகத்தில் விரைவில் பேரவைக்கான தேர்தல் வரும், அதில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்பி வியாழக்கிழமை தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் கடந்த சில நாள்களாக தொகுதிமுழுவதும் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். வியாழக்கிழமை குறுக்குச்சாலை, மீனாட்சிபுரம் மற்றும் பசுவந்தனை போன்ற பல்வேறு இடங்களில் அவர் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார். குறுக்குச்சாலையில் தனியார் தொடக்கப் பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு நோட்டு, புத்தகம் மற்றும் எழுது பொருள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியது: இத்தொகுதியில் உங்களை நம்பி போட்டியிட்ட என்னை வாக்காளர்களாகிய நீங்கள் பேராதரவு கொடுத்தும் அதிக வாக்குகள் விக்தியாசத்திலும் வெற்றி பெறச்செய்தீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றிக் கடனாக எப்போதும் உங்களின் குரலாகவே மக்களவையில் எதிரொலிப்பேன்.
மேலும் தமிழகத்தில் மக்கள் விருப்பம் போல் விரைவில் சட்டப் பேரவைக்கு தேர்தல் வர உள்ளது. அதில் திமுக வெற்றிபெற்று மக்களின் குறைகள் மற்றும் அனைத்து எதிர்பார்ப்புகளும் நிச்சயமாக நிறைவேறும். விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றார் அவர்.
அப்போது,தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் பி.ஜெகன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலர் வி.காசிவிஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலர் ராஜ்மோகன் செல்வின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.