வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் இலவசமாக தலைக்கவசம்
By DIN | Published On : 14th June 2019 07:01 AM | Last Updated : 14th June 2019 07:01 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் காவல் உள்கோட்டம் சார்பில் விபத்தினை தடுக்கும் விதமாக கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற புதிய திட்டம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. காவல்துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்புள்ள நெடுஞ்சாலையில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு துணைக் கண்காணிப்பாளர் ஆ.பாரத் தலைக்கவசம் அணிவதற்கான அவசியம் குறித்து அறிவுரை வழங்கிடு இலவசமாக தலைக்கவசத்தையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் கனகராஜன், பாஸ்கர் உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர். திருச்செந்தூர் காவல் உள்கோட்டத்திற்கு உள்பட்ட காவல்நிலையங்களில் சுமார் 100 வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது.