குடிநீர் பிரச்னையில் அரசியல் செய்கிறது திமுக: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு
By DIN | Published On : 24th June 2019 10:09 AM | Last Updated : 24th June 2019 10:09 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: குடிநீர் பிரச்னையில் அரசுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ மக்களுக்குத் தேவையான பணிகளை செய்யாமல் அந்தப் பிரச்னையை வைத்து திமுக அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது என்றார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சுனாமி, கஜா புயல் உள்ளிட்ட பேரிடர் நேரங்களில் தமிழக அரசு சிறப்பாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை சமாளிக்க, அனைத்து ஆக்கப்பூர்வமான பணிகளையும் அரசு செய்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், குடிநீர் பிரச்னையில் அரசுடன் இணைந்தோ, தனியாகவோ மக்களுக்குத் தேவையான பணிகளை செய்யவில்லை. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி மக்களிடையே பீதியை உருவாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது எந்த வகையிலும் மக்களுக்குப் பயன்பாடாக இருக்காது. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருந்தால், மக்கள் பாதிக்கப்படுகின்ற விஷயங்களில் அரசியலை ஒதுக்கிவிட்டு, மக்களைக் காக்கின்ற பணியில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை வைத்து அரசியல் செய்வது சரியான தீர்வாக இருக்காது என்பது எங்களது கருத்து. குடிநீர் பிரச்னையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.