சாத்தான்குளம் அருகே கோஷ்டி மோதல்: 11 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 06th March 2019 05:17 AM | Last Updated : 06th March 2019 05:17 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள நகனை கீழத் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (45). இவர் வடவிளையைச் சேர்ந்த மன்னன் மகன் இசக்கிராஜா (26) என்பவரிடம் மீன் வலையை ரூ. 700-க்கு விற்றுள்ளார். ஆனால் அவர் அதற்கான பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சின்னத்துரை, இசக்கிராஜாவிடம் மீன் வலைக்கான ரூ. 700 தருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் இசக்கிராஜா, அவரது அண்ணன் மந்திரகுமார், உறவினர்கள் சார்லஸ், சார்லஸ் மகன் ஜெகன், தங்கராஜ் மகன் கருப்பன் ஆகியோர் சேர்ந்து சின்னத்துரையை தாக்கினராம்.
இதேபோல் இசக்கிராஜாவை, சின்னத்துரை, அவரது உறவினர்கள் மந்திரம் மகன் முண்டசாமி, நகனைச் சேர்ந்த தங்கசாமி, பொன்குமார், ரெட்டைமுத்து, செல்லத்துரை மகன் மந்திரகுமார் ஆகியோர் சேர்ந்து தாக்கினராம்.
இதில் காயமடைந்த சின்னத்துரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையிலும், இசக்கிராஜா ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சின்னத்துரை, இசக்கிராஜா ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸார் இருதரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.