முக்காணி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி ஒருவர் சாவு
By DIN | Published On : 06th March 2019 05:15 AM | Last Updated : 06th March 2019 05:15 AM | அ+அ அ- |

முக்காணி தாமிரவருணி ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வெள்ளக்கோட்டை கிராமம் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (44). திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரிலிருந்து 23 பேர் ஒரு வேனில் புறப்பட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் முக்காணியில் உள்ள இவர்களது குல தெய்வமான இசக்கியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை மாலை சென்றனர்.
அப்போது அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது, மணிவண்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.