குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம்: கனிமொழி வாக்குறுதி
By DIN | Published On : 30th March 2019 06:23 AM | Last Updated : 30th March 2019 06:23 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் திட்டம் கொண்டுவந்த குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைக்க திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி.
தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் திட்டம் கொண்டுவந்த நகராட்சி முன்னாள் தலைவர் குரூஸ் பர்னாந்துவின் 89 ஆவது நினைவுதினத்தையொட்டி, தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:
வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வந்த நகராட்சி முன்னாள் தலைவர் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தூத்துக்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய, மாநில அரசுகள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கான திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை என்றார் கனிமொழி.
பேட்டியின்போது, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, திமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, நிர்வாகிகள் செல்வராஜ், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...