உடன்குடி அருகே உதிரமாடன்குடியிருப்பில் கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உதிரமாடன்குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்கள், மக்களவைத் தேர்தலில் தங்கள் கிராமத்துக்கு வாக்குசேகரிக்க அரசியல் கட்சியினர் வர வேண்டாம் என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனராம்.
இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், அந்த சுவரொட்டிகளை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, வெள்ளிக்கிழமை மாலை ஊர் மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவிப்பது; கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. பின்னர், கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
இதில், இந்து முன்னணி மாநிலச் செயலர் த .அரசுராஜா, உடன்குடி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் தாமோதரன், ஊராட்சி முன்னாள் தலைவர் கோ.ராஜ்குமார், அதிமுக நிர்வாகிகள் சேர்மத்துரை, ஆறுமுகபாண்டி, ஒன்றிய இளைஞர் பாசறை செயலர் செர்ணசேகர், ஊர் தர்மகர்த்தா தெய்வராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.