தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே கீழஈராலில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி, ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில், அதில் சென்ற 5 பேர் காயமடைந்தனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்த அந்தோணி பாக்கியம் (76) உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது உடலை சொந்த ஊரான தூத்துக்குடி அருகேயுள்ள சவேரியார்புரத்தில் அடக்கம் செய்வதற்காக, அவரது உறவினர்கள் அந்தோணிபாக்கியத்தின் சடலத்துடன் ஆம்புலன்ஸில் வெள்ளிக்கிழமை இரவு தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
எட்டயபுரத்தை அடுத்த கீழஈரால் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், ஆம்புலன்ஸில் சென்ற ஆரோக்கிய மேரி (72), புஷ்பராஜ் (41), மைக்கேல் மோசஸ் (40), மேரி பபிதா (36), ஜெசிந்தா (48) ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.