கோவில்பட்டி கடைகளில் சுகாதாரஅலுவலர்கள் திடீர் ஆய்வு
By DIN | Published On : 05th May 2019 01:13 AM | Last Updated : 05th May 2019 01:13 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் சுகாதார அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள தினசரி சந்தை, கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியிலுள்ள கடைகள், பேருந்து நிலையம், பிரதான சாலை, பசுவந்தனை சாலை, எட்டயபுரம் ரோடு, மந்தித்தோப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
186 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 22 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 58 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதகுறித்து, நகராட்சி ஆணையர் அச்சையா கூறியது: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து சுகாதார அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பது முதன்முறையாக கண்டறியப்பட்டால் ரூ.25ஆயிரம், 2ஆவது முறையாக கண்டறியப்பட்டால் ரூ.50ஆயிரம், 3ஆவது முறையாக கண்டறியப்பட்டால் ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, சட்டத்தை மீறும் பட்சத்தில் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...