தேசிய விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
By DIN | Published On : 05th May 2019 01:16 AM | Last Updated : 05th May 2019 01:16 AM | அ+அ அ- |

தேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், கோவில்பட்டியையடுத்த இலட்சுமியம்மாள்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் மாரியப்பன், மாவட்டத் தலைவர்கள் கருப்பசாமி (தூத்துக்குடி), வேலுச்சாமி (விருதுநகர்), அர்ச்சுனன் (திருநெல்வேலி), முருகேசன் (ராமநாதபுரம்) ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், மாவட்டத் தலைவர்கள் தேவராஜ் (மதுரை), பெருமாள்சாமி (தேனி), ராமசாமி (திண்டுக்கல்), கண்ணன் (சிவகங்கை), தூத்துக்குடி ஆடு வளர்ப்போர் சங்கத் தலைவர் கருப்பசாமி, தமிழக ஆடு வளர்ப்போர் சங்கத் தலைவர் பொன்ராஜ், தூத்துக்குடி மாவட்ட இயற்கை விவசாயிகள் தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தியுள்ள ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிருக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். செண்பகவல்லி அணையை சீர்ப்படுத்த வேண்டும்.
அழகர் அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழக விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயம் செய்ய முன்வர வேண்டும். விவசாயிகளை ஊக்கப்படுத்த நவதானிய உற்பத்திக் கொள்கைகளை அறிவித்து அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...