உசரத்துக்குடியிருப்பு - செட்டிவிளை சாலையோரம் அறுந்து கிடக்கும் மின்கம்பியால் ஆபத்து
By DIN | Published On : 15th May 2019 06:47 AM | Last Updated : 15th May 2019 06:47 AM | அ+அ அ- |

உசரத்துக்குடியிருப்பில் இருந்து செட்டிவிளை செல்லும் சாலையோரம் 15 நாள்களுக்கு மேலாக மின் கம்பி அறுந்து விழுந்து காணப்படுவதால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சிக்கு உள்பட்ட உசரத்துக்குடியிருப்பில் இருந்து செட்டிவிளை, படுக்கப்பத்து செல்லும் கிராம சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கிராம மக்கள் பாதசாரியாக மற்றும் இரு சக்கரவாகனம் , இதர வாகனங்களில் சென்று திரும்புகின்றனர். இதற்கிடையே படுக்கப்பத்து மின்வாரிய பராமரிப்பில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மூலம் வீடுகள் மற்றும் தோட்டங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் உசரத்துக்குடியிருப்பில் இருந்து செட்டிவிளை செல்லும் சாலையோரம் ஒரு மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி கம்பி அறுந்து விழுந்து 15 நாள்களாக கிடக்கிறதாம். இதனால் அப்பகுதியில் தோட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் படுக்கப்பத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், யாரும் அதனை சீரமைக்க முன்வரவில்லையாம். சாலையோரம் மின்கம்பி அறுந்து கிடப்பதால், அந்த வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மற்றும் பாதசாரியாகவும், வாகனத்திலும் வருபவர்களும் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுவதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு , அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.