சுகாதாரக் கேடுகளால் தூய்மை இழக்கும் திருச்செந்தூர் கோயில் கடற்கரை: பக்தர்கள் வேதனை
By DIN | Published On : 15th May 2019 06:46 AM | Last Updated : 15th May 2019 06:46 AM | அ+அ அ- |

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையானது சுகாதாரக் கேடுகளால் தூய்மை இழந்து வருவது பக்தர்கள் மனதை வேதனைப்படுத்தியுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு வரும் பக்தர்கள் கடற்கரையோரம் அமைந்துள்ள நாழிக்கிணற்றிலும், கடலிலும் புனித நீராடி விட்டே சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகும். இதனால் அதிகாலை முதலே கடலில் குளிப்பதற்காக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
சுகாதாரக்கேடு: திருக்கோயில் சார்பில் ஆங்காங்கே கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படாததாலும், பாதுகாப்பற்ற நிலை மற்றும் நீர் வரத்து இல்லாததாலும் பக்தர்களுக்கு பயன் இல்லாமல் உள்ளதால், கடற்கரையை திறந்த வெளி கழிப்பிடமாக பக்தர்கள் பயன்படுத்துவது தொடர்கிறது. இதனால் பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் மது அருந்துபவர்களும் ஆங்காங்கே மது பாட்டில்களையும் தூக்கி எறிவதாலும் கடற்கரையின் புனிதம் கெடுகிறது.
செல்வ தீர்த்தக்கிணறு: இத்திருக்கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு நாள் தோறும் அதிகாலை உதய மார்த்தாண்ட அபிஷேகம், பகலில் உச்சிகால அபிஷேகம், மாலையில் அர்த்தசாம அபிஷேகம் என மூன்று காலங்களில் அபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். மூன்று கால அபிஷேகங்களுக்கு, திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள செல்வதீர்த்தக்கிணற்றிலிருந்து தான் நாள்தோறும் நீர் இறைத்து கொண்டு செல்லப்படுகிறது. மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த தீர்த்தக்கிணற்றை சுற்றிலும் தற்போது அசுத்தங்கள் சூழ்ந்து காணப்படுவது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே திருக்கோயிலை சுற்றியுள்ள கழிப்பறைகள், குளியலறைகளை 24 மணி நேரமும் செயல்படும் வகையில், பராமரித்து, நீர் மற்றும் மின்சாரம் தங்கு தடையில்லாமல் ஏற்படுத்துவதுடன், அவற்றிற்கு செல்லும் வழியை ஆங்காங்கே தெரியும் வகையில் அமைத்து திருக்கோயில் வளாகத்தில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.