தாப்பாத்தி அகதிகள் முகாமில் கல்வி இடைநிற்றல் குழந்தைகள் கணக்கெடுப்பு
By DIN | Published On : 15th May 2019 06:50 AM | Last Updated : 15th May 2019 06:50 AM | அ+அ அ- |

எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பள்ளிகல்வித்துறை சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா குழந்தைகள் இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதத்தில் கணக்கெடுக்கப்படும். அந்த வகையில் 2019ஆம் கல்வியாண்டில் 6 வயது முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் மற்றும் 1 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஜேம்ஸ், ஒருங்கிணைந்த கல்வி திட்ட கள அலுவலர் கூடலிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தாப்பாத்தி கிராமம் மற்றும் தாப்பாத்தி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பள்ளி செல்லாத குழந்தைகள், கல்வி இடைநிற்றல் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள், அப்பகுதியில் உள்ள மாணவர்கள் குறித்த முழு விவரங்கள் குறித்து வீடு, வீடாக சென்று விவரங்களை சேகரித்தனர்.
அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தமிழ்வழி கல்வி, ஆங்கில வழி கல்வி என கல்வியின் தரம் குறித்தும், எல்.கே.ஜி முதல் 8ஆம் வரை சேர்க்கை விவரம் குறித்தும் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி அரசுப்பள்ளியில் மாணவ, மாணவியரை சேர்ந்து பயனடைய அறிவுறுத்தினர்.
இப்பணியில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் லட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் விஜயலட்சுமி, மணிகண்டன், ஜீனத்பேகம், சிவசங்கரி, அனிதா, அஸ்வினி, சிறப்பு ஆசிரியர்கள் சுதா, ஆரோக்கியராஜ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.