தூத்துக்குடி சிவன் கோயிலில் வருண ஜெபம்
By DIN | Published On : 19th May 2019 07:51 AM | Last Updated : 19th May 2019 07:51 AM | அ+அ அ- |

மழை வளம் வேண்டி தூத்துக்குடி சிவன் கோயிலில் சனிக்கிழமை வருண ஜெபம் நடைபெற்றது.
தமிழகத்தில் கோடை காலத்தில் நிலவும் வெப்பத்தை தணிக்கும் வகையிலும், மழை வேண்டியும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வருண ஜெபம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியான் உடனுறை சங்கர ராமேஸ்வர கோயிலில் வருண ஜெபம் சனிக்கிழமை நடைபெற்றது,
இதையொட்டி, கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற வருண ஜெபத்தின்போது மழைப்பதிக பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் யாக குண்டத்தில் இருந்து தீர்த்த குடங்களை எடுத்து கோயில் பிரகாரத்தை வலம் வந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
அக்னி நட்சத்திரம் நடைபெறுவதையொட்டி தாரா அபிஷேகம் தொடங்கியது. இந்த அபிஷேகம் மே 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் நடைபெற்ற வருண ஜெபத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...