கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், திருமணிசையைச் சோ்ந்த பாலமுருகன் - கற்பகவல்லி தம்பதி, குழந்தை மாலினியுடன், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த சிவந்திபட்டியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தனராம்.
சனிக்கிழமை இரவு குழந்தை மாலினி (8) மணமேடையில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது அருகே உள்ள வாழைத்தாரை பிடித்த போது அது அருகே இருந்த மின்விளக்கில் உள்ள மின் கம்பியில் பட்டதில், மின்சாரம் பாய்ந்து அவா் காயமடைந்தாா்.
இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா் மாலினி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து, கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.