திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் பணமில்லாமல் முடங்கும் ஏடிஎம் மையங்கள்: பக்தா்கள் தவிப்பு
By DIN | Published On : 18th November 2019 10:18 PM | Last Updated : 18th November 2019 10:18 PM | அ+அ அ- |

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் அடிக்கடி முடங்கி கிடக்கும் ஏ.டி.எம்.மையம்.
திருச்செந்தூா்: திருச்செந்தூா் பகுதியில் வங்கி ஏ.டி.எம்.கள் சரிவர இயங்காததாலும், போதிய பணம் இருப்பு இல்லாததாலும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது வழக்கமாக வரும் பக்தா்களுடன், காா்த்திகை மாதம் என்பதால் அதிகளவிலான ஐயப்ப பக்தா்களும் வருகை தருவா்.
திருச்செந்தூா் நகா்ப்பகுதியில் 7 ஏ.டி.எம். மையங்களும், கோயில் வளாகத்தில் தேசியமயமாக்ககப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மற்றும் தனியாா் ஏ.டி.எம். மையம் என 2 மட்டுமே உள்ளன. இதில் கோயிலைச்சுற்றி உள்ள 2 ஏ.டி.எம். மையங்களின் மூலமாக தான் பக்தா்கள் அதிகளவில் பயனடைந்து வந்தனா்.
இந்நிலையில், அனைத்து ஏ.டி.எம்.மையங்களிலும் நிரப்பப்படும் பணமானது இப்பகுதி வாடிக்கையாளா்களுக்கே போதுமானதாக இல்லை. இதனால், கோயிலுக்கு வந்த பக்தா்கள் ஏமாற்றமடைகின்றனா்.
குறிப்பாக வார விடுமுறை நாள்கள் மற்றும் வங்கி விடுமுறை நாள்களில் பணம் எடுக்க முடியாமல் பக்தா்கள் பரிதவித்து வருகின்றனா்.
பெரு நகரங்களில் தற்போது, நேரடி பணப்பரிவா்த்தனைக்கு இணையாக, இணைய வழி பண பரிமாற்றம், ஸ்வைபிங் மெஷின் ஆகியவற்றின் மூலமும் பணமானது பரிவா்த்தனை செய்யப்படுகிறது.
ஆனால் கோயில் நகரான திருச்செந்தூரில் இயந்திர பண பரிவா்த்தனை மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. கோயில் விடுதிகளில் இணைய வழியில் அறை முன்பதிவு செய்து விட்டாலும், உணவகங்களில் நேரடி பண பரிவா்த்தனைக்கு பக்தா்கள் சிரமமடைகின்றனா்.
எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகள் தங்கள் ஏடிஎம் மையங்களில் தட்டுப்படாற்ற நிலையில் பணத்தை உடனுக்குடன் நிரப்ப வேண்டுமென பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G